தலைப்பாகை நபி ‎ﷺ ‏யின் வழிமுறையா???முக்காடு போடுதல் நபி ‎ﷺ ‏யின் வழிமுறையா???




தலைப்பாகை நபி ﷺ யின் வழிமுறையா???

முக்காடு போடுதல் நபி ﷺ யின் வழிமுறையா???

தலைப்பாகை கட்டுவது தான் பெருமானார் காலத்திற்கு முன்பும், சென்ற நூற்றாண்டு வரைக்கும் உள்ள அரபுகள் பின்பற்றிய வழிமுறை ஆகும்.

முக்காடு எனும் தைலஸான் என்பது யூதர்கள் அணியும் ஆடையாகும்.

அரபு முஸ்லிம்கள் (இமாமா அல்லது அமாமா) எனும் தலைப்பாகை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

அரபு கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் இந்த முக்காடு எனும் தைலஸானை அணியும் வழக்கம் கொண்டிருந்தார்கள்.

மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் யூத கிறிஸ்தவர்களுக்கு ,மாற்றம் செய்ய சொல்லி இருக்கிறார்கள், மேலும் செய்து காட்டியுள்ளார்கள்.

وأما الطيلسان [ وهو : غطاء يطرح على الرأس والكتفين ، أو على الكتفين فقط ، يلبسه اليوم كثير من القساوسة وأحبار اليهود ، انظر: " المعجم الوسيط " (2/553)]

தைலசான் என்பது தலையிலும் இரண்டு தோள் புஜங்களிலும் மேலே வைத்து முக்காடாக மூடி விடக் கூடிய ஒரு துணி அமைப்பு.இன்று அதை அதிகமாக அணிபவர்கள் கிறிஸ்துவர்களும், யூத அறிஞர்களும்.

அல் முஃஜமுல் வஸீத்
2/ 553.

இப்னுல் கைய்யும் தன்னுடைய ஸாதுல் மஆதில் கூறுகிறார்:

قال ابن القيم في زاد المعاد: وأما الطيلسان فلم ينقل عنه أنه لبسه، ولا أحد من أصحابه،

இந்த முக்காடு முறை ஆடையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வாழ்க்கையில் அணிந்தது கிடையாது.

மாறாக ஸஹீஹ் முஸ்லிமில் வரும் செய்தி உறுதியானது.

 بل قد ثبت في صحيح مسلم من حديث أنس بن مالك، عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الدجال، فقال: «يخرج معه سبعون ألفًا من يهود أصبهان، عليهم الطيالسة».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலைப் பின்தொடர்ந்து "அஸ்பஹான்" (ஈரான்) நாட்டைச் சேர்ந்த யூதர்களில் எழுபதாயிரம் பேர் வருவார்கள். அப்போது அவர்கள் "தயாலிசா" எனும் (கோடு போட்ட கெட்டியான) ஒரு வகை ஆடை அணிந்திருப்பார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
                      
         - முஸ்லிம் 5643

 ورأى أنس جماعة عليهم الطيالسة، فقال: ما أشبههم بيهود خيبر. ومن ها هنا كره لبسها جماعة من السلف والخلف.

 
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் அவர்கள் ஒரு கூட்டத்தாரை பார்த்தார்கள் அவர்கள் தயாலிஸாவை அணிந்திருந்தார்கள்.

(மற்றொரு ஹதீஸில் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையில் அணிந்ததாக வந்துள்ளது)

இவர்கள் ஹைபரில் வாழும் யூதர்களுக்கு ஒப்பாக இருக்கிறார்கள் என்று (கோபத்துடன்) கூறினார்கள்.

முன்னோர்கள் பின்னோர்கள் என அனைவரும் இந்த முக்காடு முறை தைலஸானை மக்ரூஹ் என்றே பார்க்கிறார்கள்.

 - ஸாதுல் மஆது லிஇப்னில் கையூம்,

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடை பற்றிய பாடம்.)

* மேலும் ஹனஃபிய்யாக்கள் இதை மக்ரூஹ் தஹ்ரீமீ என கூறுகிறார்கள்.

அதாவது ஹராமுக்கு நெருக்கமான மக்ரூஹ். யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆடை விஷயத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில்.

இன்றளவிலும் கூட இஸ்பஹான் உடையை யூதர்கள் அந்த தைலஸான்  ஆடையை தலைக்கு முக்காடு போன்று அணிகிறார்கள்.

https://youtu.be/Y3JE7DdRsU0

வெள்ளையும் கருப்பும் கோடுபோட்ட நிறம் கொண்டதாக அது இருக்கிறது.

எனவே நிறம் கருப்பா? வெள்ளையா? மஞ்சளா? என்பது இங்கு முக்கியத்துவம் இல்லை. யூதர்கள் அணியும் ஆடை என்று நமக்கு உறுதியாகிவிட்டாலோ, அதை அணியும் முறை, கட்டும் முறையையே  பார்க்க வேண்டும்.
 அதில் நிறம் என்ன  என்று நாம் தனியாக பிரித்து பார்க்க அவசியமில்லை.

இமாம் முல்லா அலீ காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய விரிவுரையில் அந்த ஆடை அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மஞ்சள் நிறமாக இருந்தது என்ற கூடுதல் தகவலை தருகிறார்கள்.

இது கூடுதல் தகவல் தானே தவிர்த்து மஞ்சள் நிறம்தான் அது புறக்கணிக்கப்பட்டதற்கு காரணம் என்று திட்டவட்டமாக இல்லை.
மேலும் கூறுகிறார்கள்

وأدنى الدرجات فيه الكراهة

(ஈமானிய) படித்தரங்களில் மிகவும் தாழ்ந்தது அதை முற்றாக வெறுப்பது.

பொதுவாக யூதர்கள் அணியும் ஆடை என்பதால் அதை ஆரம்பத்தில் வெறுப்பது என்பது முதல் விஷயம் என்று ஃபுகஹாக்கல் கூறுகிறார்கள்.

நிறங்கள் மாறி இருந்தாலும் கூட அந்த ஆடை யூதர்கள் வாங்கும் ஆடை தய்லஸான்  என்று அறிந்தால் அது வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இப்பொழுது தயாரிக்கப்படும் பெரும்பான்மை தய்லஸான்களும் வெள்ளை நிறத்தில் கறுப்பு கோடு போட்டதாகவே தயாரிக்கப்படுகிறது.

* இமாம் உமருப்னு மன்ஸூருல் அஜீலி கூறுகிறார்கள்.

இந்த வகையில் முக்காடு போல அணியும் முறை என்பது புதுமையானது தான்.

ஆனால் தலைப்பாகைக்கு மேல் பக்கமாக முக்காடு இட்டு அதன் இரண்டு முனைகளையும் கழுத்துக்குப் பின் பக்கமாக சுற்றிக் கொள்வது சிறந்தது.

இரண்டு பக்கமும் தொங்காமல் கீழே தொங்க விடுவது என்பது அஹ்லுத் திம்மா (யூத, நஸாரா, ஏனைய மதத்தவர்)
பழக்கம் இது வெருக்கத்தக்கது என்று கூறுகிறார்கள்.

 அல் மவாஹிபுல் முஹம்மதிம்யா பக்கம் : 314

அவை யூதர்களின் கலாச்சாரம்.
 அது யூதர்களின் பாரம்பரிய ஆடை.

حواشي تحفة المنهاج 

என்ற கிதாபில் இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த முக்காடு போல அணியும் ஆடையை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ஆனால் இந்த முக்காடு வடிவத்தை தான் இப்பொழுது அரபுகள் முழுக்க முழுக்க பின்பற்றுகிறார்கள்.

சொல்லப்போனால் இது இவர்களின் பழக்க வழக்கமாக மாறி விட்டது. இந்த பழக்க வழக்கம் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடத்தில் இல்லாமல் இருந்தது. யூதர்களிலும், அரபு கிறிஸ்தவர்களிலும் இருக்கும் மத அறிஞர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்தனர்.

மேலும் தய்லஸான் எனும் வார்த்தை  நாம் இயல்பாக உடலில் உடுத்தக் கூடிய கட்டியான ஆடையையும் குறிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய ஃபத்ஹுல் பாரியில் கூறுகிறார்கள்:

وفي فتح الباري لابن حجر : وَهُوَ الثَّوْب الَّذِي لَهُ عَلَم وَقَدْ يَكُون كِسَاء ...

(தய்லஸான்)அது அடையாளம் கொண்ட ஆடை. அது உடுத்தும் உடுப்பாகவும் பயன்படும்.

وَوَقَعَ فِي حَدِيث أَسْمَاء بِنْت أَبِي بَكْر عِنْد مُسْلِم أَنَّهَا " أَخْرَجَتْ جُبَّة طَيَالِسَة كِسْرِوَانِيَّة فَقَالَتْ : هَذِهِ جُبَّة رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " .

அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தய்லஸான் வகை ஜுப்பாவை அணிந்தார்கள் என்று வந்துள்ளது.

இந்த வகை துணிகள் என்பது ஆடையாக பயன்படுத்தப்படுவதாகும். இதை பெருமானாரோ, சஹாபாக்களோ வெறுக்கவில்லை.

ஏனெனில் இது ஒரு வகையான கட்டியான துணியில் நெய்யப்படக் கூடிய ஆடையை தான் குறிக்குமே தவிர இது அசல் தைலஸானும் கிடையாது.

ஆடைக்கு தய்லஸான் என சொல்வது நேரடிப் பொருள்  கிடையாது அது மஜாஸி எனும் உவமைப் பொருள் என்று இமாம் இப்னுல் அஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

பெருமானார் வெறுத்த அந்த தைலஸான் ஆடை என்பது முக்காடு வடிவம் என அனஸ் ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

எனவே இது யூதர்களின் அடையாளங்களில் ஒன்றாகும்.
இன்று வரைக்கும் யூதர்களின் மதகுருமார்கள் பயன்படுத்தும் ஆடைகளில் ஒன்றாகும்.

உண்மையில் அரபு முஸ்லிம்களின் பழக்கம் தலைப்பாகயாகவே இருந்தது.

உமர் ரலியல்லாஹு அவர்கள் கூறுகிறார்கள்
العمائم تيجان العرب

 தலைப்பாக என்பது அரபுகளின் கிரீடம் ( அடையாளமாகும்)

இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய தாயார் அவர்களை மதரஸாவுக்கு அனுப்பும் பொழுது தன் கரத்தால் அவர்களுக்கு தலைப்பாகையை கட்டிவிட்டு கூறுவார்கள்:

خذ من شيخك ادبا قبل العمل 

உனது குருவிடம் கல்விக்கு  முன்னால் ஒழுக்கத்தை கற்றுக் கொள் என்று உபதேசித்து அனுப்புவார்கள்.

எனவே தலைப்பாக என்பது அரபுகளின் ஒரு வழக்கம்  என்பதும், தய்லஸான், தயாலிஸா என்பது அரபு யூத, கிருஸ்துவர்களின் வழக்கம் என்பதும் உறுதியாகிறது.

சமீபமாக ஒரு 200 நூற்றாண்டுக்குள் தான் அரபுகள் தங்களின் அடையாளமான தலைப்பாகையை விட்டுவிட்டு யூதர்களைப் போல முக்காடு இட்டு அணிபவர்களாக மாறினார்கள்.

மேலும் ஒரு அடையாளத்துக்கு கூட  தலைப்பாகை கட்டும் முறை இல்லாமல் ஒழித்து விட்டார்கள்.

ஹரமில் பணிபுரியக்கூடிய இமாம்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரியும் இமாம்கள் தலைப்பாகை கட்டுவது வெறுக்கப்பட்டது  போன்றும் மன்ஹஜிலிருந்து பிரிவதை போன்று காணப்படுகிறார்கள்.

நான் பார்த்தவரைக்கும் பெரும்பாலும் எந்த அரேபிய அறிஞரும் தலைப்பாகை என்ற அடையாளத்தை ஒரு பேருக்காக கூட கட்டுவதில்லை.

தலைப்பாகை கட்டுவது உயிர்ப்பிக்க கூடிய நாடுகள் என்று சொன்னால் அது ஷாம் மற்றும் எகிப்து,  இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான்.

தலைப்பாகை கட்டுவது சுன்னத் எனும் நபிவழி என்று இந்திய உலமாக்கள் ஆதாரம் கூறினால்....

உடனே இந்த அரேபியர்கள் முண்டாசு கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்...

அப்படியெல்லாம் கிடையாது தலைப்பாகை என்பது அரபுகளின் வழிமுறை தானே தவிர்த்து சுன்னத் எனும் நபிவழி கிடையாது என்பார்கள்...

சரிப்பா அரபுகளின் வழிமுறை என்று வைத்துக் கொள்வோம்.

அந்த அடையாளம் இப்பொழுது எங்கே போனது???

ஏன் நீங்கள் யாரும் தலைப்பாகை அணிய வில்லை.
என்று கேட்டால் இதுவும் இன்னொரு புதிய அரபுகளின் வழிமுறை என்று கிக்கி பிக்கி சிரிப்புச் சிரிக்கிறார்கள்.

மேலும் அவ்வாறு இவர்கள் கட்டும் முக்காடு முறைக்கு ஷிமாஹ் என்றும் ஹத்ரா என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

நீங்கள் என்ன பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஹதீஸில் கூறப் பட்டிருக்கும் யூதர்களின் தைலஸான் வகை ஆடையை நீங்கள் கையில் எடுத்திருப்பது முந்தைய அரபுகளின் வழிமுறையையும், பெருமானாரின் தலைப்பாகை கட்டும் முறையையும் நீங்கள் விட்டு விட்டீர்கள் என்பதை உறுதி ஆகிறது.

மேலும் முஸ்லிமில் வரும் ஹதீஸ்.

தஜ்ஜாலை 70 ஆயிரம் யூதர்கள் இஸ்பகானில் பின்பற்றுவார்கள்.
அவர்கள் அனைவரும் இந்த தைலஸான் வகை ஆடைகளை அணிந்திருப்பார்கள்.

அதுவும் மத அறிஞர்கள் உட்பட அனைவரும் இந்த முக்காடு அடையாளங்களை பின்பற்ற ஆரம்பித்தார்கள். 

தய்லஸான் வகை ஆடைகளுக்கு மிகப்பெரிய நிபந்தனைகள் இருக்கின்றன நமது மார்க்கத்தில். அது எந்த விதத்திலும் யூதர்களுடன் ஒப்பாக கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு அதை அணிந்தாலும் தொப்பிக்கு மேல் அணிந்து இரண்டு பக்கமாக சுற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் கூட ஒரு வகையில் புதிய பிதுஅத் தான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்க்கையில் அவர்களும் அவர்களின் தோழர்களும் ஒரு முறை கூட இவ்வாறு அணிந்ததில்லை என்று இப்னுல் கைய்யும் கூறுகிறார்.

ஹிஜ்ரதுக்காக புறப்படும் பொழுது தங்களின் தலையை மறைத்தவர்களாக வந்தார்கள் என்ற ஒரே ஒரு வாக்கியம் மட்டும்தான் ஃபத்ஹுல் பாரியில் இருக்கிறது.

குறைஷிகளின் கண்களில் படக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்த வண்ணம் பெருமானார் வந்தார்கள்.

அதுவும் நபிகளாரின் வழிமுறை அல்ல பெருமானாரின் வழிமுறை தலைப்பாகை தான்.

தலையையும் முகத்தையும் மறைத்து பெருமானார் அவர்கள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள் என்பது குறைஷிகள் இடத்தில் முகம் தெரியக்கூடாது என்பதற்காக.

ஆனால் தலைப்பாக என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விருப்பமான ஆடையாகவும், அரபுகளின் அடையாளமாக, இன்றளவும் அது உண்மையான சத்திய வழியில் இருப்பவர்கள் பின்பற்றும் அடையாளமாகவும் இருக்கிறது.

பெருமானார் காலத்தில் வாழ்ந்த அரபுகளின் அடையாளம் என்பது தலைப்பாகை தான். தலையிலே சுற்றுகள் விடக்கூடிய, அதனுடைய இரண்டு முனைகளையும் முதுகுக்குப் பின்னால் தொங்க விடக்கூடிய பழக்கம் என்பது நபிகளார் காலத்தில் பின்பற்றப்பட்ட அடையாளமாகும்.

தலைப்பாகை கட்டுவதால் ஏற்படும் சிறப்புகள் என பல ஹதீஸ்கள் வருகின்றன. அவைகளில் அனைத்து அறிவிப்புகளிலும் பலவீனம் இருக்கிறது என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நாம் ஏற்கனவே முதலில் கூறி இருப்பதைப் போல பலவீனமான ஹதீஸ்களை சிறப்பு என்ற அடிப்படையில் எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை.

அவ்வாறு எடுத்துக்கொள்வது ஹதீஸ் கலைக்கு எதிரானதும் கிடையாது.

அப்படி இல்லவே இல்லை என்பது மறுப்பதுதான் ஹதீஸ் கலைக்கு எதிரானது.

தலைப்பாகை கட்டுவது சிறப்பானது என்பது இமாம்கள் பலரிடத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் தலைப்பாகை கட்டுவது நபிவழி சுன்னதா? என்ற ஒரு கேள்வி இருக்கிறது.

இதில் இரண்டு விதமான தரப்பினர்கள் இருக்கின்றனர். 

முதல் தரப்பினர் கூறுகிறார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் தலைப்பாகை கட்டினார்கள் என்று கூறுகின்றனர்.

இது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்து.

இரண்டாம் தரப் பினர்: தலைப்பாகை கட்டுவது நபிவழி எனும் சுன்னது தான் என்று கூறுகிறார்கள்.

இது அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்து.

ஏனெனில் அரபுகளின் இயல்பான பழக்கவழக்கத்தில் தலைப்பாகை கட்டுவது என்பது உண்மைதான்.

ஆனால் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் அதன் கூடுதல் முக்கியத்துவத்தை பெருமானார் எடுத்து காண்பிக்கிறார்கள் என்பதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

உதாரணத்திற்கு போருக்குச் செல்லும் பொழுது கொடியை ஏந்திச் செல்வது.

இது பெருமானாருக்கு முந்தைய அரபுகளின் பழக்கமாக கூட இருந்திருக்கலாம்.
இன்றும்கூட போருக்குச் செல்லும் பொழுது கொடியை பிடிப்பது கிறிஸ்துவர்களின் பழக்கமாக கூட இருக்கிறது.

ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருப்புக் கொடியை சஹாபாக்களில் படைத்தளபதிகள் கையில் கொடுத்து இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

முன்னால் இருந்த மக்கள் பின்பற்றி இருந்தார்கள் என்றாலும் கூட அதை பெருமானாரின் கரம் பட்டு ஒரு விஷயம் செய்யப்படும் பொழுது அது தனக்கு பிடித்து இருக்கிறது என்பதும் இஸ்லாமிய வழியில் வழக்கமாக அதை காட்டுவதும் பெருமானாரின் பாணியில் உள்ள ஒன்று.

எனவே முஸ்லிம்கள் போர் செய்யும் பொழுது கொடி பிடிப்பது நபிவழியா???

இந்தக் கேள்விக்கு பதில் என்ன???

முந்தைய அரபுகளும் கொடி பிடித்து இருக்கிறார்கள், இப்பொழுது போர் செய்யக் கூடிய கிறிஸ்தவர்களும் கொடி பிடிக்கிறார்கள் எனவே இது நபி வழி இல்லை என்று சொல்ல முடியாது.

எனவே போரில் இஸ்லாமிய கொடி பிடிப்பது சுன்னதுதான்.

முஸ்லிம்களுக்கு இதில் வழிகாட்டுதல் இருக்கிறது என்பது உறுதியாகிறது.

இதை பெருமானார் அவர்கள் ஒரு அடையாளமாக செய்து காட்டி இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு பின்பற்ற போதுமானதாக இருக்கிறது.

அதுபோலவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு போருக்குச் செல்லும் பொழுதும் தலைப்பாகை அணிந்தும், தலைப்பாகைக்கு மேல் இரும்பு கவசத்தை அணிந்து போர் செய்துள்ளார்கள் என்பது எங்களுக்கு ஒரு அடையாளம் காட்டப்படுகிறது.

போருக்குச் செல்ல கூடிய தளபதிகளுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகை கட்டி விட்டது ஆதாரப்பூர்வமான செய்திகள் இருக்கிறது.

அகல் போரின்போது பெருமானார் அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தலைப்பாகை கட்டி விட்டது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானார் அவர்கள் தலைப்பாகை கட்டி விட்டது.

இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்துத்தான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அது நபி வழி எனும் சுன்னத் என்று கூறுகிறார்கள்.

جاء رجل الى بن عمر رضي الله عنه فقال يا ابا عبد الرحمن : العمامة سنة ؟ قال نعم 

ஒரு மனிதர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அப்துர் ரஹ்மானுடைய தந்தையே : தலைப்பாக என்பது நபி வழியா என்று கேட்டார்?
அதற்கு அவர்கள் கூறினார்கள் ஆம் நபிவழி தான் என் கூறி விட்டு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானார் அவர்கள் தலைப்பாகை கட்டி விட்டதை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

உம்ததுல் காரி ஷரஹுல் புஹாரி,
21 ம் பாகம்,
455 ம் பக்கம்.

இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒருவர் கேட்டார்: 
பின்பக்கம் தலைப்பாகையை கழுத்துப் பகுதியில் தொங்க விடாமல் சுருக்கி தலைப்பாகை கட்டுவது பற்றி கேட்கப்பட்ட பொழுது அவ்வாறு செய்யக்கூடாது என்று மறுத்தார்கள். அது மாற்றாரின் பழக்கம் என்று சொன்னார்கள்.

உம்ததுல் காரி ஷரஹுல் புஹாரி,
21 ம் பாகம்,
456 ம் பக்கம்.

 قد نص فقهاء الشافعية والحنابلة على أنه يسنّ له أن يعتم ويرتدي اقتداء بالنبي صلى الله عليه وسلم في ذلك؛ 

ஷாபி மத்ஹப் மற்றும் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைச் சார்ந்த உலமாக்கள் தலைப்பாகை கட்டுவது சுன்னத் எனும் நபிவழியாகும் என கூறுகிறார்கள்.

 அம்ருப்னு ஹுரைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் படி இது சுன்னத் என்று ஆதாரம் பிடிக்கிறார்கள்.

لما رواه عمرو بن حريث - رضي الله عنه - أن النبي صلى الله عليه وسلم خطب الناس وعليه عمامة سوداء

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அவர்களுடைய தலையில் கருப்பு நிற தலைப்பாகை இருந்த நிலையில்
 மக்களுக்கு பிரசங்கம் செய்தார்கள்.
 
- முஸ்லிம்
- பைஹகீ

அந்த தலைப்பாகை கட்டும் முறை என்பது,

 தலைக்கு மேல் சுற்றுவதும், இரண்டு தோல் புஜங்களுக்கு பின் புறமாக அதை தொங்க விடுவதும் நபிவழியாகும்.

 فعن ابن عمر رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا اعتم سدل عمامته بين كتفيه. قال نافع: وكان ابن عمر يفعل ذلك. .

رواه الترمذي

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் நபி ஸல் அலை செல்லும் அவர்கள் தலைப்பாகை கட்டி னால் தங்களின் இரண்டு தோள் புஜங்களுக்குப் பின்னால் தொங்க விடுவார்கள்.
நாபிஃ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் :

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இவ்வாறு செய்வதை நான் பார்த்துள்ளேன்.
 
- திர்மிதீ

எனவே தலைப்பாகை அரபுகளின் அடையாளம், சஹாபாக்களின் அடையாளம், பத்ரில் கலந்து கொண்ட வானவர்கள் அடையாளம், மறுமையின் நெருக்கத்தில் இறங்கிவரும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடையாளம்.

ஆனால் தைலசான் என்பது யூதர்களின் அடையாளம்.

மேலும் தஜ்ஜாலை பின்பற்றும் யூதர்கள் முக்காடு வடிவ தய்லஸானை அணிந்து இருப்பார்கள் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது.

மற்றொரு ஹதீஸில் ஹவாரிஜ்கள் யூதர்களுடன் சேர்ந்து தஜ்ஜாலை பின்பற்றுவார்கள் என்று வந்துள்ளது.

மற்றொரு ஹதீஸில் தஜ்ஜால் மதினாவில் நெருங்கும் பொழுது வானவர்கள் அவனை தடுப்பார்கள் என்றும் பிறகு மதினா மூன்று முறை குலுங்கும். அதன் காரணமாக அதில் இருக்கும் இறை நிராகரிப்பாளர்களும் முஸ்லிம் வேடத்தில் இருக்கும் நயவஞ்சகர்களும் மதீனாவை விட்டும் வெளியேறி விடுவார்கள் என்றும் வந்துள்ளது.

எனவே இந்த மூன்று ஹதீஸ்களையும் இணைத்து விளங்கி பாருங்கள்.

தஜ்ஜாலை யூதர்கள் பின்பற்றுவார்கள்.

யூதர்களை ஹவாரிஜுகள் பின்பற்றுவார்கள்.

மதினாவிலிருந்து இஸ்லாமிய பெயர்தாங்கி நயவஞ்சகர்கள் வெளியேறி விடுவார்கள்.

வந்தவர்கள் தஜ்ஜாலுடைய படையில் இணைந்து வருவார்கள்.

யூதர்களுடைய அன்றைய அடையாளம் முக்காடு வடிவ தய்லஸான்.

அப்பொழுது யூதர்களை பின்பற்றும் முஸ்லிம் பெயர் தாங்கி நயவஞ்சக ஹவாரிஜ்கள் அடையாளம் என்னவாக இருக்கும்???

இப்பொழுது இஸ்ரேல் யூதர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பது யார்???

அமெரிக்க சியோனிஸ யூதர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பது யார்???

யூதர்களுடைய அடையாளம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது???

சிந்தித்து நீங்களே முடிவெடுங்கள்....

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Comments