நடுநிலையாளரா நீங்கள் ??? (ஆர் யூ உஸ்தா) ???

நீங்கள் நடுநிலைவாதிகளா???

நிறைய நண்பர்களிடம் நாம் கேள்விப்பட்ட ஒன்று...

நீங்கள் எந்தக் கொள்கையை சார்ந்தவர்கள்???

அதற்கு அவர்கள் சொல்வது நாங்கள் நடுநிலைவாதிகள்...

நடுநிலை என்பது எதில் இருக்க வேண்டும்?

இஸ்லாம் கூறக்கூடிய அகீதா அடிப்படை நடுநிலை எது???

சட்ட அடிப்படையில் கூறும் நடுநிலை எது???

குணங்கள் அடிப்படையில் கூறும் நடுநிலை எது???

இதை புரியாவிட்டால் நடு நிலையிலேயே நமக்கு நடுநிலை இருக்காது....

தெளிந்த விஷயத்திலேயே நமக்கு தெளிவு இருக்காது...

ஒரு விஷயத்தில் நடுநிலையும் மறு விஷயத்தில் முரண்டு பிடித்தாலும் வந்துவிடும்...

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குணங்கள் விஷயத்தில் சொன்ன நடுநிலை என்ற வார்த்தையை எடுத்து கொண்டு அதை அகீதா உடைய விஷயங்களில் சேர்த்து இணைத்து விட்டு இதுவும் நடுநிலை தான் என்று சிலர் கூறுகின்றனர்...

இவ்வாறு இவர்கள் மாற்று விளக்கம் கொடுப்பது எப்படி இருக்கிறது என்று சொன்னால்...

நாங்கள் நடுநிலையானவர்கள்.

 எந்த அளவிற்கு என்று சொன்னால் நடுரோட்டில் கூட நாங்கள் நடுவில் தான் போவோம்.

நடுரோட்டில் நடுவில் நடக்கும் அளவிற்கு நாங்கள் நடுநிலைவாதிகள்.

கிளாசில் இருக்கும் டீயை அதிலிருக்கும் நடுப்பகுதியை மட்டும் சரியாக குடித்து விடுவோம் என்பதை போல...

எனவே இவர்கள் சொல்ல வருவது ஒரு பக்க நடுநிலையை மட்டும்தான்...

மார்க்கம் சொல்லும் நடுநிலை என்ன என்றால்...

குணங்கள், மற்றும் சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மார்க்க பிரச்சாரங்கள் ஆகியவற்றில்தான் அன்றி கொள்கையில் அல்ல...

யாரையும் ஒரேடியாக வெறுத்து விடாதீர்கள் யாரையும் ஒரேயடியாக நேசித்தும் விடாதீர்கள்...

ஒரே அடியாக தர்மம் கொடுத்து விடாதே முழுவதுமாகத் தடுத்தும் கொள்ளாதே...

உன் மனைவியை ஒரேயடியாக வளைக்க வேண்டும் என்று நினைத்து விடாதே அப்படி என்றால் அதை உடைத்து விடுவாய்.
 அவளுக்கு ஏற்றார்போல் முழுக்கவும் போய் விடாதே...

பாமரர்கள் உடன் சேர்ந்து மடையனாக ஆகிவிடக்கூடாது அறிவாளி உடன் சேர்ந்து பெருமை உடையவனாக ஆகிவிடக் கூடாது...

மக்களின் அறிவுக்கு தகுந்தார் போல் பேச வேண்டும்...

தினமும் உபதேசம் செய்து சலிப்படையச் செய்துவிடக்கூடாது.
 உபதேசமே செய்யாமல் விட்டு விடவும் கூடாது...

இதுபோன்று நடுநிலை விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

சட்ட அடிப்படையில் உண்டான நடுநிலையை நாம் பார்ப்போம்: 

 
اختلاف الائمة رحمة الامة

அறிஞர்களுக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடு இந்த உம்மத்திற்கு வரப்பிரசாதம்...

இந்த வார்த்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்லிய ஹதீஸா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கின்றது...

ஆனால் மிகவும் பிரபல்யமானது இது ஃபிக்ஹுத்துறை அறிஞர்களின் கருத்தும் தான்...

இந்த உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் வரவேற்கப்படுகின்றன...

இதில் நடுநிலை உண்டு...

அது எந்த விஷயத்தில்???

சஹாபாக்கள் தங்களுக்கு மத்தியில் கொள்கை விஷயத்தில் முரண்பட்டார்களா???

கொள்கையில் முரண்படவில்லை.
முரண்பாடாக தெரிந்த இரண்டு சஹாபாக்களின் வேறுவேறான விஷயங்களை ஒன்றிணைத்து சரியான விளக்கத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்றோர் விளக்கம் கொடுத்துள்ளார்கள்...

ஆனால் ஃபிக்ஹு சட்டங்கள் மார்க்கச் சட்டங்களில் கருத்து வேறுபாடு கொண்டு உள்ளார்கள்...

அதில் நடுநிலை கையாளப்பட்டு இரண்டு தரப்பினர்களும் வித்தியாசமாக இருந்திருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு  இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும்  இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன....

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அபூ ஸயீத் அல் குத்ரி ரலியல்லாஹு ஆகியோருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றன...

எனவே சட்டங்கள் அடிப்படையில் நடுநிலை கையாளப்படுகிறது...

ஆனால் கொள்கையில் அடிப்படையான விஷயங்கள் எந்த  சஹாபாக்களும் மாறுபடவில்லை...

எனவே மார்க்கத்தில் கொள்கை விஷயத்தில் மத்திய தன்மை என்பது நாம் நினைக்கக் கூடிய நடுநிலை போக்கு என்ற மத்திய தன்மை கிடையாது...

அந்த மத்திய தன்மை எனும் நடு நிலைக்கு வேறு அர்த்தம் உண்டு...

அல்லாஹ் இந்த தீனை, குர்ஆனை, கொள்கைகளை  அனைத்தையும் தராசு எனும் மீஸானுடன் ஒப்பிடுகிறான்

وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ‏
 
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
(அல்குர்ஆன் : 55:7)

எனவே மார்க்கம் போதிக்கும் கொள்கை சட்டங்கள் என்பது தராசின் நடுநிலையை குறிக்குமே தவிர அட்ஜஸ்மெண்ட் செய்து நகரக்கூடிய நடுநிலையை குறிக்காது...

ஏனெனில் தராசின் முள்ளானது வலப் பக்கமும் சாயாமல் இடப்பக்கமும் சாயல் நடு மத்தியில் இருந்தால் மட்டுமே அது உண்மையான நடுநிலையாகும்...

இந்த உம்மத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்றான நடுநிலை சமுதாயம் என்பது கொள்கையில் மீசான் ஆக இருக்கவேண்டும் என்பதையும் குறிக்கிறது...

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا 
 
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; 

(அல்குர்ஆன் : 2:143)

கொள்கையில் தராசு போலில்லாமல் நான் எல்லாரும் சொல்வதையும் கேட்டுக்கொள்வேன் அவர் சொல்வதையும் கேட்பேன் இவர் சொல்வதையும் கேட்பேன் வழி கெட்டவன் சொல்வதையும் கேட்பேன் வழிகெடுப்பான் சொல்வதையும் கேட்பேன் என் சிந்தனையில் யோசித்துப் பார்ப்பேன் என்று சொல்லி கொள்கை விஷயத்தில் அனைத்தையும் ஒன்றிணைப்பது அகீதாவில் தராசாக இல்லாமல் இருப்பதை காட்டும்...

முஸ்லிம் ஷரீபின் முன்னுரையில் இமாம் இப்னு சீரின் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم

இந்தக் கல்வி என்பது தீன் ஆகும். எனவே நீங்கள் யாரிடம் இருந்து கல்வியை எடுக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

எனவே கொள்கை என்பதை சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும்...

நமக்கு மார்க்கம் போதிக்கும் அறிஞர்கள் அனைவரும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லவும் முடியாது.
 வழிகெட்ட பிரிவை சார்ந்த பல அறிஞர்களும் இருக்கத்தான் செய்வார்கள்...

இந்த கொள்கை என்ற ஒரு விஷயத்தை தவிர மற்ற ஏனைய எல்லா விஷயங்களையும் அனைவராலும் திறம்பட சொல்லித்தர முடியும்...

ஏனெனில் கொள்கை அல்லாத மற்ற அத்தனை விஷயங்களும் அதிகமாகவும், கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கூட அவைகளை ஆய்வில் பயன்படுத்தி நம்மால் சரி காண முடியும்..

ஆனால் கொள்கை விஷயத்தை அனைவராலும் சரியாக யூகித்து இதுதான் சரியான பாதை என்று சொல்ல முடியாது...

இதுதான் சத்தியக் கொள்கை என்பதை ஒரு சிலரால் மட்டுமே அறிய முடியும்...

அவர்கள் அறியும் கோணமும் மாறுபடுகிறது...

வெறும் புத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஹதீஸ் நம்பர்களை மட்டும் வைத்துக்கொண்டு உண்மையான கொள்கையை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்...

குர்ஆனும், ஹதீசும், ஹதீஸ் உடைய எண்களும், இமாம்களின் கருத்தும் ஒரு புறத்தில் இருந்தாலும் இவைகளை எடை போடக்கூடிய தீர்க்கமான பார்வையும், தெளிந்த உள்ளமும், நற்குணமும், அல்லாஹ்வுடைய மறைமுகமான உதவியும் இல்லாமல் இதை உரசி பார்க்க முடியாது...

ஆரம்பத்திலேயே இந்த தன்மைகளை எல்லாம் பெறாமல் தகுதி இல்லாமல் குர்ஆன், ஹதீசை கையால்வது மெழுகு பற்களால் இரும்பு ரொட்டியை சாப்பிடுவது போல் ஆகும்.

மறைவான அல்லாஹ்வுடைய உதவி மற்றும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படக்கூடிய உள்ளத்தில் விழும் உதிப்பு ஆகியவற்றைக் கொண்டும் அல்லாஹ் வழி நடத்துவான்.

இதற்குக் காரணம் அல்லாஹ் நமக்கு வைத்திருக்கும் சோதனைதான்...

வெளிரங்க வாழ்க்கையையும், அந்தரங்க வாழ்க்கையையும், அறிவையும், நம்பிக்கையையும் ஒன்றிணைக்கும் பொழுது சத்திய வழி எது என்பது அல்லாஹ்விடமிருந்து நமக்கு புலப்படும்...

எனவே கொள்கையை பொறுத்தவரைக்கும் அதை அறிய அறிவு மட்டுமே மூலதனம் அல்ல. அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து மறைமுகமாக வரும் ஒரு உதவியும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஆன்மீக அனுபவத்தையும் சாரும்...

இதைத்தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் உபதேசிக்கிறான்.

قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ‌‌ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ 

(பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)

எனவே நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 72 கூட்டங்களும் நரகத்திற்கு போகும் ஒரு கூட்டம் மட்டுமே சொர்க்கத்திற்குப் போகும்...

இங்கே கவனிக்கத்தக்க விஷயம் 72 கூட்டத்தார்கள் உடைய மெஜாரிட்டி என்பது உலகில் நூற்றுக்கு 98 சதவீதம் என்று கூட ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம்...

இத்தனை நபர்களும் குர்ஆனையும் ஹதீஸையும் இமாம்களின் கருத்தையும் தான் சொல்வார்கள்...

அப்படி என்றால் அந்த ஒரு கூட்டத்தாருக்கு இருக்கும் தனி சிறப்புகள் என்ன???

அது தங்கள் அறிஞர்களிடமிருந்து கேட்ட அறிவுபூர்வமான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களையும் தாண்டி உள்ளம் சார்ந்த ஒரு வகையான இனம்புரியாத தேட்டம்...

சத்தியக் கொள்கையை அடைய வேண்டிய ஒரு ஆன்மீகத் தேட்டம்....

எதிலும் திருப்தி கொள்ளாத ஒரு வகை மனோநிலை...

கல்வியை போதுமாக்கிக் கொண்டு பெருமையடிப்பது விட்டும் நீங்கி இருத்தல்...

தனித்திருந்து மனத்தூய்மையுடன் அல்லாஹ்வை வணங்கி தனிமையில் தன்னைப் பற்றியும் தன் தவறுகளை பற்றியும் சிந்தித்து உணர்தல்...

இந்த பக்குவ வளர்ச்சியை ஒவ்வொரு நபிமார்களும் அவர்கள் மக்களுக்கு மத்தியில் தங்களின் நபித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னால் வாழ்ந்து இருப்பதை நாம் பார்க்கலாம்...

நபிமார்கள் குகைகளிலும், வீடுகளிலும், ஆடுகள் மேய்க்கும் இடங்களிலேயும், பார்த்துக் கொள்ள யாருமே இல்லாத அனாதையான சூழ்நிலைகளேயும், சுயபரிசோதனை செய்து தங்கள் அறிவுக்கு எட்டிய விஷயங்களையும் தாண்டி அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதயமாக கூடிய உள்ளம் சார்ந்த தெளிவையும் பெற்றுக் கொண்டதற்கு பின்னால் மக்களுடன் ஒன்றோடு ஒன்று கலக்கிறார்கள்...

இந்த ஒன்றோடொன்று கலந்து விட்டதற்கு பின்னால் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட வழி கேடுகளை நம்மாள் கிரகிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் நம்முடைய உள்ளம் தெளிந்த நிலையில் இல்லாமல் இருப்பதே...

 குர்ஆன் ஹதீஸ் மற்றும் அறிவுபூர்வமான ஆதாரங்களையும் முன் வைக்கக் கூடிய அதே நேரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படக்கூடிய இறையச்சம், உள்ளுணர்வின் வழிகாட்டுதலின் படியும் நாம் செயல்படும் பொழுது அல்லாஹ் நமக்கு அந்த ஒற்றை கூட்டத்தை காட்டுவான்...

அந்த உள் பார்வை மற்றும் ஆன்மீக தெளிவு மேலும் ஆன்மீகத்தை தன் நல்லடியார்களுக்கு அல்லாஹ் வழங்குகிறான்...

அவர்கள்  தீன் பணிக்கு வருவதற்கு முன்னாலேயே அல்லாஹ் கொடுக்கும் இறையச்சம் மற்றும் உள்ளுணர்வின் மூலமாக அந்த விஷயம் சரியா தவறா என்பதை உணர்ந்து விடுகிறார்கள்...

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்பே அந்த உணர்வை நாம் கொடுத்து விட்டோம் என்று அல்லாஹ் கூறுகிறான்

وَلَـقَدْ اٰتَيْنَاۤ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَ كُنَّا بِهٖ عٰلِمِيْنَ‌‏ 

இன்னும், நாம் முன்னரே
 இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
(அல்குர்ஆன் : 21:51)

எனவே கொள்கை எனும் மார்க்க விஷயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் கிடையாது.

அது தராசின் முள் தான்.

நேர்வழி இதுதான் என்று தெளிவாகி விட்டால் அதில் ஒரு எட்டு பின்வாங்கக் கூடாது...

இதில் கூடுதல், குறைவு, அட்ஜஸ்ட்மெண்ட் போன்றவை கிடையாது

 கொள்கையில் நடுநிலை போக்கு என்பது அங்குமிங்கும் தாவுவது அல்ல மாறாக தராசின் முல்லை போன்று கொள்கையில் உறுதியுடன் இருப்பது தான்...

அதற்கு முதலில் கொள்கை எது என்பது நமக்கு தெரிய வேண்டும்???

இப்படி உண்மையான வழியைத் தெரிந்து கொள்வது சாதாரண விஷயமும் அல்ல...

சத்தியத்தின் கொள்கையை அடைவதற்கு மிகவும் போராட்டம் தேவை மிகவும் அதிகமான காலம் தேவை.

இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய தப்ஸீரில் ஒரு துஆவை பதிவு செய்கிறார்கள்

اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه

وارنا الباطل باطلا وارزقنا اجتنابه

யா அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாக வே எங்களின் கண்களுக்கு காட்டுவாயாக.

மேலும் அதைப் பின்பற்றக் கூடிய பாக்கியத்தையும் எங்களுக்குத் தருவாயாக...

மேலும் அசத்தியத்தை அசத்தியம் ஆக எங்களுக்கு காட்டுவாயாக அதை விட்டும் ஒதுங்கி இருக்கும் பாக்கியத்தையும் எங்களுக்குத் தருவாயாக.

சாலிஹீன்கள் இவ்வாறு துவா செய்து வந்தார்கள் என்று இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

சத்திய வழியை சத்தியமாக அறியக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்.

- இப்னு கபீர்

Comments