அஷ்அரிய்யா அகீதா - 01 முகவுரை




அஹ்லுஸ் சுன்னாஹ் அல் அஷாயிரா...

பாகம் 1.

மூன்று நூற்றாண்டுகளில் சொல்லப்படாத சட்டங்களையும், சொல்லப்படாத அகீதாவையும் கொண்ட ஒரு கூட்டம் ஹிஜிரி 800 க்கு பின்னால் உருவானது...

பிறகு அது ஹிஜ்ரி 1200 ல்  சூடுபிடித்தது...

மத்திய கிழக்கில் சலஃபிய்யா என்ற கொள்கை உருவானது...

இவர்கள் தங்களை அஹ்லுஸ் சுன்னா என்றும் அஹ்லுல் ஹதீஸ்  என்றும் அஹ்லுத் தவ்ஹீது என்றும், ஸலஃபிகள் என்றும் சொல்லிக்கொண்டார்கள்...

உண்மையில் இவர்கள் அஹ்ளுஸ் சுன்னா கிடையாது...

இவர்களுக்கு என்று ஒரு தனி மதுஹப் கூட கிடையாது...

இவர்களின் மூல குருவான இப்னு தைமியா தன்னை ஹம்பலி மத்ஹப் என்றுதான் அறிமுகப்படுத்தினார்...

அவரின் கொள்கையில் நின்று கூட இவர்கள் ஹம்பலி மதுஹபாக இல்லை...

இவர்கள் தங்களை ஹம்பலியாக்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை...

இப்பொழுது லேட்டஸ்ட் வெர்ஷனில் இவர்கள் அப்டேட் ஆகி விட்டார்கள்...

அதுதான் த நியூ மாடல் ஆகிய ஸலஃபியிஸம்....

ஆனால் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான அறிஞர்களின் கூட்டங்கள் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி மத்ஹபுகளை பின்பற்றக்கூடிய அறிஞர்களாகவும் அகீதாவில் அஷ்அரிய்யாகவும் மாதுருதியாகவும் இருந்துள்ளார்கள்....

இந்த அஷ்அரிய்யா மற்றும் யாதுருதிய்யா கொள்கை தான் அஹ்லு சுன்னா என்று காலம் காலமாக அறியப்பட்டு இருந்தார்கள்...

எனவே அவர்கள் யார் என்று இன்ஷா அல்லா பார்க்கலாம்...

அஷ்அரிய்யா கொள்கை என்றும் மாதுருதிய்யா கொள்கை என்றும் அகீதாவில் இரண்டு மதுஹப்கள் உண்டு....

இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரி ரஹிமஹுல்லாஹ் அவர்களை பின்பற்றுபவர்கள் அஷ்அரிய்யாக்கள் அல்லது அஷாயிராக்கள் என்றும்...

அபூ மன்ஸுர் அல் மாதுரதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களை பின்பற்றுபவர்களை மாதுருதிய்யா என்றும் கூறப்படும்...

மதுகப் தான் இரண்டே தவிர இருவரின் கொள்கையும் ஒன்றே.

அதாவது ஹனபி, ஷாபி, மாலிகி, ஹம்பலி ஆகிய நான்கும் இணைந்துதான் அஹ்லுஸ் ஸுன்னா...

எனவே எந்த ஒரு அறிஞரை நாம் பார்த்தாலும் அவர் சட்டத்துறையில் ஷாபியாகவோ, ஹனபியாகவோ இருப்பார்...

அகீதாவில் அஷ்அரிய்யாகவோ மாதுருதியாகவோ இருப்பார்...

பெரும்பான்மை ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் அஷ்அரியாக இருப்பார்கள்...

ஹனபியாக்கள் மாதுரிதியாக‌ இருப்பார்கள்...

சிலர் மாற்றமாகவும் இருப்பார்கள்.
ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சட்டத்துறையில் ஹனஃபியாகவும் அகீதாவில் அஷ்அரியாகவும் இருந்தார்கள்...

அஷ்அரி மற்றும் மாதுரிதி  ஆகிய இருவரும் சமகாலத்தில் வாழ்ந்த இரண்டு அறிஞர்கள்...

இவர்களைப் பின்பற்றும் அறிஞர் பெருமக்களின் கூட்டம்தான் கடல் அலைகளை போன்று உள்ளது...

ஹதீஸ் துறை அறிஞர்களில் பெரும்பான்மையானவர்கள் ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்களே....

ஹதீஸ் துறைக்கு ஷரஹு எனும் விரிவுரை ஆற்றும் பெரும்பாண்மை அறிஞர் பெருமக்கள் அனைவரும் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களே....

(ஹதீஸ் துறை அறிஞர்கள் இன் பெரும் பட்டியலை இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகத்தில் நாம் பட்டியலிடுவோம்....)

எனவே இந்த கூட்டத்தார் சம்பந்தமாக ஹதீஸ்களில் என்ன வந்துள்ளது என்று நாம் பார்க்கலாம் !!!!!

وأخرج ابن سعد وابن أبي شيبة في (مسنده) وعبد بن حميد والحكيم الترمذي وابن جرير وابن المنذر وابن أبي حاتم والطبراني وأبو الشيخ وابن مردويه والحاكم وصححه، والبيهقي في (الدلائل) عن عياض الأشعري قال: 

சூரத்துல் மாயிதா உடைய 54 ஆம் வசனம் இறங்கிய பொழுது நபி ஸல்லல்லாஹ் ஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

((لما نزلت فَسَوْفَ يَأْتِي اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ [المائدة:54] قال رسول الله:

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:54)

இந்த வசனம் யாரைக் குறித்து இறக்கப்பட்டது என்று பெருமானார் இடத்தில் கேட்கப்பட்டது...

 هم قوم هذا وأشار إلى أبي موسى الأشعري رضي الله عنه)) 

(எனவே) அபூ மூஸா அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பக்கம் கை காட்டி இவருடைய கூட்டத்தைச் சார்ந்தவர்கள் தான் அவர்கள் என்று கூறினார்கள்...

  عن أبي موسى الأشعري رضي الله عنه قال: ((تليت على النّبيّ صلى الله عليه وسلم فَسَوْفَ يَأْتِي اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ [المائدة:54] الآية فقال النّبيّ صلى الله عليه وسلم: قومك يا أبا موسى الأشعري، أهل اليمن)) 

மற்றொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பக்கம் கை நீட்டி உமது கோத்திமான (அஷ்அரிய்யாவில்) எமனை சார்ந்த மக்கள் தான் அவர்கள் என்றும்...

பைஹகீ தலாயிலுந் நுபுவ்வா 5/ 4466.
ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 3368.

  عن جابر بن عبد الله قال: ((سئل رسول الله صلى الله عليه وسلم عن قوله فَسَوْفَ يَأْتِي اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ [المائدة:54] الآية فقال: هؤلاء قوم من أهل اليمن ثم كندة ثم السكون ثم تجيب)) (3).

 சூரா மாயிதா 54 வசனத்திற்கு விளக்கம் தருகையில் அவர்கள் எமனைச் சார்ந்தபிரிவினர்கள்‌ (அஷீஅரிய்யா, கின்தா,  ஸகூன், பனூ துஜீப்).

தப்ரானீ 2/1033
மஜ்மஃ ஸவாயித் 7/19
ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 7/1104.

قال رسول الله (الأشعريين هم مني وأنا منهم) وهذا الحديث رواه الزركشي في اللآلئ المنثورة وهو حديث صحيح

அஷ்அரிய்யாக்கள்‌ என்னிலிருந்தும், நான் அவர்களிலிருந்தும் இருக்கிறேன்.

- தஹ்ரீஜுல் மிஷ்காத் லிஇப்னி ஹஜர்.

இது போன்ற ஏராளமான சிறப்புகள் அஷ்அரியா கோத்திரத்துக்கு உண்டு...

அவர்கள் போரில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்றும் அதே போல அவர்கள் காதிசிய்யா போர்களில் மிகப்பெரும் வலிமையாக செயல்பட்டார்கள் என்றெல்லாம் வந்துள்ளது...

மேலே நாம் பதிவு செய்த மாயிதா சூராவுடைய 54வது வசனம் ஒரு கூட்டத்தை மாற்றிவிட்டு வேறு ஒரு கூட்டத்தை அல்லாஹ் கொண்டு வருவான் என்ற வசனம் என்பது செல்வம்,யுத்தம், கல்வி சார்ந்த புரட்சிப் பணி போன்ற பல்வேறு கோணங்களில் அந்த கூட்டத்தாரின் உதவி இந்த உம்மத்துக்கு இருக்கும் என்று உலமாக்கள் விரிவுரை ஆற்றுகிறார்கள்...

அதாவது தாபியீன்கள் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் கொள்கை குழப்பமான ஜஹ்மிய்யா, முஃதஸிலா போன்ற வழிகெட்ட கூட்டங்களை ஒடுக்குவதற்காக அல்லாஹ்வால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள்தான் இந்த அஷ்அரியாக்கள்...

ஹதீஸ் கலை அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை விட்டும் அதன் தூய்மைத் தன்மையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்...

எனவே அவர்களுடைய பணிகள் இரண்டு விதத்தில் இருந்தது.

 ஒன்று ஹதீஸ்களின் வார்த்தைகளை பாதுகாத்தல்.

மற்றொன்று அதை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தொடரையும், அவர்களின் வரலாறுகளையும் பாதுகாத்தல்...

இந்த இரண்டுமே மிகப்பெரிய கடுமையான போராட்டமாக அவர்களுக்கு இருந்தது...

எனவே தான் ஹதீஸ் கலை அறிஞர்களால் தாங்கள் எழுதிய ஹதீஸ்களுக்கு அவர்களே விளக்கம் எழுதுவது சாத்தியம் இல்லாமல் இருந்தது...

இமாம் புகாரி, இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா ஆகியோர் இதன் காரணமாக திருமணம் கூட முடிக்கவில்லை.

எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒரு பக்கம் பெருமானாரிடத்தில் இருந்து வந்த ஹதீஸ்களை பாதுகாக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்...

மற்றொரு கூட்டத்தார்கள் முதலாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சட்டப் பிரச்சனையை சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் மத்ஹபு உடைய உலமாக்கள்...

இவர்கள் ஹதீஸ்களின் சட்டங்கள் சம்பந்தமான அர்த்தங்களை பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள்...

ஹவாரிஜுகளின் வருகைக்கு பின்னும், முஃதஜிலா வருகைக்கு பின்னும் ஒரு சிறு அமலை விட்டவன் கூட பாவி என்றும் காஃபிர் என்றும் சட்டங்கள் பறந்து கொண்டிருந்த நேரத்தில் ஃபிக்ஹு சட்டத்தை பாதுகாக்கும் பணியை  உலமாக்கள் ஆற்றிக்கொண்டிருந்தார்கள்...

எனவே மதுஹபுடைய உலமாக்கள் அனைவருமே ஹதீஸ் அறிவிப்புகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை...

காரணம் ஹதீஸ்களின் உள் அர்த்தங்களில் பெறப்படும் அசல் சட்டம், கிளைச் சட்டங்கள் வகுப்பதிலும் உஸுலுல் பிக்ஹு எனும் ஃபிக்கு சட்ட ஞானத்தின் அடிப்படை கல்வியை உருவாக்குவதிலும் சுழன்று கொண்டிருந்தார்கள்...

மேலும் இவர்கள் ஹதீஸ் துறை அறிஞர்களுக்கு மிகப் பெரும் பக்கபலமாக இருந்தார்கள்...

ஹதீஸ் துறை அறிஞர்கள் வார்த்தைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். ஃபிக்ஹு துறை அறிஞர்கள் ஹதீஸின் அர்த்தங்களை சட்டங்கள் விஷயத்தில் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள்...

எனவே முதல் இரண்டு நூற்றாண்டுகளில் கொள்கை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்காததால் அவர்கள் கொள்கை விஷயத்தில்
(அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறானா? கை, கால், உருவங்கள் அவனுக்கு உண்டா? என்பது போன்ற)
 மிக ஆழமாக பேச வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது...

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஜஹ்மியா, முஃதஸிலா போன்றோர் மிக வேகமாக பரவிய பொழுது மேலும் அகீதா விஷயத்தில் முஸ்லிம்களை காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்று விமர்சித்த பொழுது அகீதா விஷயத்தை ஆய்வு செய்யவும், அடிப்படை சட்டங்கள், கிளை சட்டங்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மூன்றாம் நூற்றாண்டு அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் தள்ளப்பட்டார்கள்...

முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இவைகள் பேசுவது தடை செய்யப்பட்டிருந்தது.
 குறிப்பாக இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வுடைய அர்ஷு சம்பந்தமாக வரக்கூடிய ஆராய்ச்சியை பேசுவதை விட்டும் தடுத்து இருந்தார்கள்.
 காரணம் அவர்கள் காலத்தில் கொள்கை குழப்பத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது, ஃபிக்ஹு தான் ஆய்வுக்குரியதாக இருந்தது...

குறைவாக பேசக்கூடிய மக்களும், பொய் பேசாத மக்களும், பேணுதல் உள்ளவர்களும் நிறைந்திருந்த காலம் என்பதால் அகீதாவை அலச வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. எனவே ஆரம்ப கட்ட தடை அகீதா விஷயத்தில் இருந்தது...

இது அகீதாவுக்கு மட்டுமல்ல.
 ஃபிக்ஹு சட்டங்களுக்கும் முதல் நூற்றாண்டில் தடை இருந்தது...

அதாவது ஒரு மசாயில் பிரச்சனை வருவதற்கு முன்னாலேயே அது வந்தால் என்ன தீர்வு என்பதை யோசித்து ஆராய்ச்சி செய்து சட்டம் எடுக்கக்கூடியது ஃபிக்ஹு ஆய்வு தடைசெய்யப்பட்டிருந்தது ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில்...

சைய்து பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இதை தடை செய்து இருந்தார்கள் என்று ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்....

ஆனால் ஹிஜ்ரி எழுபதற்கு நெருக்கத்தில் வந்த சட்ட பிரச்சனைகளின் காரணமாக பல விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது...

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய நெஞ்சில் கை கட்டுதல்,  அத்தகியாத்தில் விரலசைத்தல் போன்ற விஷயங்களுக்கு எல்லாம் இவன் காபிர் அவன் முஷ்ரிக்கு என்று தீர்ப்பு சொல்லும் முட்டாள்கள் உருவானார்கள்...

எனவே சட்டத்தில் எதை விட்டால் காபிர் ஆகிறான், எதை செய்வது   முஸ்தஹப்பு, எது வாஜிபு, எது மக்ரூஹு, எது நஃபிலான வணக்கங்கள், எது செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி எனும் ஜாயிஸ் இருக்கிறது போன்ற உஸூலுல் ஃபிக்ஹு உருவாக்க வேண்டிய நிர்பந்தம் முதல் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் உருவானது....

எனவே தான் இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபி போன்ற பேரறிஞர்கள் பிக்ஹுத் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்...

அதுவரைக்கும் மேலோட்டமாக ஹதீஸ்களை மனனம் செய்வதும் பாதுகாப்பதையுமே பார்த்த சமுதாயம் சட்டப் பிரச்சினைகளில் உள்ளர்த்தங்கள் கவனம் செலுத்தி இதுபோன்ற சட்ட வடிவங்களை ஏற்படும் பொழுது இது மார்க்கத்தில் இல்லாத நூதனமான அனாச்சாரம் என்று இந்த அறிஞர் பெருமக்களை சிலர் கடுமையாக விமர்சித்தார்கள்....

தங்களின் சொந்த உத்திகளையும், அறிவையும், தர்க்கங்களையும் மார்க்கத்தில் புகுத்துகிறார்கள் என்றும் அவர்களை விமர்சித்தார்கள்....

ஆனால் அந்த மேன்மைக்குரிய இமாம்கள் குர்ஆனையும், ஹதீசையும், ஸஹாபாக்களையும், மொழிப் புலமையையும், தங்களின் அறிவையும் பயன்படுத்தி அந்த பிக்ஹு சட்டங்களை எழுதினார்கள்...

அன்றிலிருந்து இன்றுவரை அந்த சட்டங்கள் நிலைத்துவிட்டது அல்லாஹ்வால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதன் அடையாளமாக...

எனவே அந்த பிக்ஹு துறை அறிஞர்கள் அக்கீதா மஸாயில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது...

ஏற்கனவே பிக்ஹு சட்டங்கள் வருவதற்கு முன்னாலேயே
( உதாரணத்திற்கு மகர் கொடுக்காமலேயே ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் சட்டம் என்ன என்பது போன்ற பின்னால் நடக்க கூடிய விஷயங்களை யூகிப்பது.....)
 அதன் பிரச்சனைகளுக்கு ஆய்வு கண்டு எழுதக் கூடியது சஹாபாக்கள் இடம் தடை செய்யப்பட்டிருந்தது . பிறகு அதற்கு நிர்பந்தம் ஏற்படும் பொழுது அதை கையாண்ட உலமாக்களின் மீது கடுமையான விமர்சனமும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது....

கிட்டத்தட்ட 1000 வருடங்களையும் தாண்டி நடக்கும் அனைத்து சட்டப் பிரச்சனைகளையும் முன்கூட்டியே யூகித்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபிக்ஹு மஸாயில் சட்டங்களை இமாம் அபு ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதினார்கள்...

அஹ்லுர் ரயீ அதாவது குர்ஆன் ஹதீஸில் அதைத் தாண்டி அறிவை பயன் படுத்துபவர் என்ற பொய்யான விமர்சனம் அவர்கள் மீது இருந்தது...

எனவே இந்த விமர்சனமே கடுமையாக இருந்த பொழுது புதிதாக இல்லாத அகீதா பிரச்சினைகளை முன்கூட்டியே யோசித்து அதற்கு தீர்வு கண்டு கொண்டு இருந்தால் மிகவும் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்திவிடும் என்பதால் அகீதா விஷயத்தில் ஆராய்ச்சி செய்யாதீர்கள் என்று உலமாக்கள் கூறினார்கள். காரணம் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை....

இரண்டாம் நூற்றாண்டுக்குள் பல்வேறுவிதமான பிக்கு சட்டங்கள் தொகுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் அகீதா பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தது....

இதை நம்பினால் தான் முஸ்லிம், இதை நம்பினால் காபிர் என்ற பிரச்சனைகள் வரும் பொழுது அதற்கு சட்டங்கள் இயற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் உள்ளாக்கப்பட்டார்கள்...

தன் கொள்கைக்கு எதிராக வரும் ஹதீஸ்களை எல்லாம் மறுக்கக் கூடிய கூட்டங்களும், சஹாபாக்களை ஏற்க முடியாது, அவர்களின் ஹதீஸ்களை ஏற்க முடியாது காரணம், அவர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்று முன் வரும் பொழுது இதை சமாளிக்க முடியாமல் ஹதீஸ் துறை உலமாக்கள் திணறிப் போய் இருந்தார்கள்...

எனவே இப்பொழுது அகீதா விஷயத்தில் ஹதீஸ் துறை அறிஞர்களுக்கு பெரும் உதவி செய்ய நிர்பந்தம் ஏற்பட்டது...

ஆன்மீகத்தை மையமாகக்கொண்டு ஜஹ்மிய்யா கூட்டமும்,
அறிவைப் பிரதானப்படுத்தி முஃதசிலா கூட்டமும், 
அரசியலை மையப்படுத்தி ஹவாரிஜ் கூட்டமும்
சமூகத்தை செல்லரித்து கொண்டிருந்தது...

அந்த நேரத்தில் தான்.....

சேற்றில் முளைத்த செந்தாமரையாய், வழிகேடர்களின் பாசறையில் வளர்ந்த ஒரு மாபெரும் அறிஞர் அப்பொழுது உதயமானார்...

அவர் ஆற்றிய தொண்டுகள் 1000 ஆண்டுகளை தாண்டியும் நிலைபெற்றிருக்கிறது...

அகீதா விஷயத்தில் அவரை பின்பற்றக்கூடிய கூட்டத்திற்கு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்று சொல்லப்படும்...

அறிவிற்கு ஒரு எல்லை உண்டு, அதை தாண்டி சிந்திக்க கூடாது, இறைவனைப் பற்றி பேசுவதற்கு ஒரு எல்லை உண்டு, அதை தாண்டி பேசக்கூடாது, மொழிக்கு ஒரு எல்லை உண்டு, அதை தாண்டி பேசக்கூடாது, 
பிலாசபி எனும் கிரேக்க தத்துவத்திற்கு ஒரு எல்லை உண்டு அதை தாண்டி தத்துவம் பேசக்கூடாது, மார்க்கத்தில் தத்துவத்தின் எல்லை ஒரு அளவிற்கு தான் உண்டு, அதை தாண்டி பேசக்கூடாது,
அல்லாஹ்வுக்கு பயன்படுத்தக்கூடிய மொழியியல் வார்த்தைகள் உண்டு, அதைத்தாண்டி அல்லாஹ்வுக்கு சிலவற்றை  பேசுவது கூடாது, மொழியில் வரும் சில வார்த்தைகள் அல்லாஹ்விற்கு  தகுதியாக குறிப்பிட்ட வார்த்தைகள் தான் இருக்கிறது, எனவே தகுதியற்ற வார்த்தைகளை பேசக்கூடாது, அல்லாஹ்வுக்கு இருக்கும் கட்டாய பண்புகள் அவனுக்குரியது, அல்லாவுக்கு தகுதியற்ற பண்புகள் பேசக்கூடாது, தகுதியற்ற பண்புகளை அவனது வல்லமைக்கு கீழ் உண்டு என்று கூறக்கூடாது என்ற ஏராளமான சட்டங்களை அந்த இமாம் தொகுத்து இரண்டாம் நூற்றாண்டின் பின்னால் உருவான அந்த குழப்பத்தை ஒடுக்கினார்கள்.

அவர்கள்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்குறுதியளித்த அஷ்அரிய்யா கோத்திரத்தில் அபூமூஸா அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில் வந்த அபுல் ஹஸன் அல் அஷ்அரி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி ஆவார்கள்...

40 வருட காலம் முஃதஸிலா கூட்டத்தில் உஸ்தாதாக பணியாற்றி, அவர்களின் கொள்கைகளை பரப்பி பிறகு அல்லாஹ் அவர்களை அஹ்லுஸ் சுன்னாவின் இமாமாக தேர்ந்தெடுத்து பிறகு முஃதஸிலா கூட்டத்திற்கே சாவு மணி அடிப்பவராக ஆக மாறிவிட்டார்கள்...

கொள்கை விஷயத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கக் கூடாது அதற்கு தகுதியான விளக்கம் கூற வேண்டும் என்ற வழிமுறையை சஹாபாக்களின் விளக்கத்துடன் கூடி தன்னுடைய ஆய்வையும் முன்வைத்து சமூகத்திற்கு தெளிவுபடுத்தினார்கள்...

அவர்களின் வருகைக்குப் பின்தான் முஃதஜிலா எனும் கூட்டமே ஒடுங்கி  போனது...

பிக்ஹு துறை அறிஞர்கள் குர்ஆன், ஹதீசுக்கு அடுத்தபடியாக சஹாபாக்களின் கூற்றற ஆதாரமாக வைத்து தங்கள் அறிவைப் பயன்படுத்தி சட்டம் கண்டபொழுது பொறாமைக்காரர்களால் இவர் சொந்த அறிவை புகுத்துகிறார் என்று விமர்சிக்கப்பட்டார்களோ அதேபோல அபுல் ஹஸன் அல் அஷ்அரி இமாம் அவர்களும் விமர்சிக்கப்பட்டார்கள்...

ஆனால் அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களும் அவர்களை பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு அழைத்துள்ளார்கள்...

لإمام أهل السنة والجماعة"،

 (1) இமாமு அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ
 
شيخ أهل السنة والجماعة
(2) ஷேஹு அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ

رئيس أهل السنة والجماعة

(3) ரயீஸு அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஆ

شيخ السنة ورئيس الجماعة

(4) ஷேஹுஸ் ஸுன்னா வ ரயீஸுல் ஜமாஆ...
إمام أهل الحق

(5) இமாமு அஹ்லில் ஹக்...

إمام المتكلمين

(6) இமாமுல் முதகல்லிமீன்....

زعيم المجددين
(7) ஸயீமுல் முஜத்திதீன்....

شيخ الإسلام والمسلمين
(8) ஷேஹுல் இஸ்லாம் வல் முஸ்லிமீன்...

ناصر سنة

(9) நாஸிருஸ் ஸுன்னா

இவர்களின் தந்தை இஸ்மாயில் இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு ஹதீஸ் துறை அறிஞராக இருந்தார்கள்.

மேலும்  மிகச்சிறந்த ஹதீஸ் துறை அறிஞரான ஜகரியா இப்னு யஹ்யப்னு அப்திர் ரஹ்மான் அஸ் ஸாஜீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஹதீஸ்களை பயில்வதற்காக தன் மகனை வசியத் செய்து இருந்தார்கள்...

எனவே அவர்களின் மூலமாக ஹதீஸ்களை கற்ற ஒரு ஹதீஸ் துறை அறிஞராக இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இருந்தார்கள்...

ஆனாலும் ஹதீஸ் அறிவிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் அகீதாவில் தங்களை கவனத்தை செலுத்தினார்கள்...

 ஹதீஸ் தெரியாமல் ஹதீசுக்கு உள்ளர்த்தங்கள் கொடுக்க முடியாது...

இமாம் அபூஹனிபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுநராக இருந்தார்கள் என்று இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸ்தாத் யஹ்யா இப்னு ஆதம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.

இமாம் பைஹகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மிகப்பெரும் ஹாஃபிழாக இருந்தார்கள் என்று கூறுகிறார்கள்....

 ஏனென்றால் ஹதீஸ்களின் ஞானம் இல்லாமல் அதன் உள்அர்த்தங்களில் கவனம் செலுத்தவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது...

ஃபிக்ஹு என்ற வார்த்தை சட்டங்களுக்கும், அகீதாவுக்கும் சேர்த்துக் கூறப்படும். ஆனால் பிறகு  அது சட்ட கலைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு விட்டது...

كل فقيه محدث وليس كل محدث بفقيه

எல்லா ஃபிக்ஹு அறிஞர்களும் ஹதீஸ் துறை அறிஞர்களாக இருப்பார்கள்.

ஆனால் எல்லா ஹதீஸ் துறை அறிஞர்களும் பிக்ஹு துறை அறிஞர்களாக இருக்கமாட்டார்கள்..

இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு மிகச்சிறந்த ஹதீஸ் துறை அறிஞராகவும் ஆகீதாவில் ஃபிக்ஹு துறை அறிஞராகவும் இருந்தார்கள்...

ஆனால் முழுக்க முழுக்க தன் வாழ்க்கையை ஹதீஸ் துறை அறிஞர்களுக்கு உதவி செய்யும் விதமாக கொள்கைகளுக்கு முரண்பாடான வழிகேடர்களை ஒடுக்குவதில், அதற்குரிய கவாயிது எனும் சட்டங்களை இயற்றுவதிலேயும் பெரும் பங்காற்றினார்கள்....

தொடரும்....

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

       - இப்னு கபீர்.

Comments